உலகின் சிறந்த 30 நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்த மும்பை மற்றும் டெல்லி!!

601

mumbai_delhi_002

உலகின் சிறந்த 30 நகரங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்தியாவின் மும்பை மற்றும் டெல்லி ஆகியவை இடம் பெற்றுள்ளன.பொருளாதார வலிமையின் அடிப்பையில் உலகின் சக்தி வாய்ந்த, 30 சூப்பர் நகரங்கள் தொடர்பாக சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஜே.எல்.எல் ஆய்வு நடத்தியது.

தற்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவின் மும்பை, டில்லி நகரங்கள் இடம் பெற்றுள்ளன.இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உலகில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் நிறுவனங்கள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ள, 30 நகரங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் நியூயார்க், லண்டன், மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள், இடம்பெற்றுள்ளன.ஒட்டுமொத்த அன்னிய முதலீட்டில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை இந்த 4 நகரங்களுக்கு கொண்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்டியலில் இந்தியாவின் மும்பை, 22வது இடத்திலும், தலைநகர் டில்லி, 24வது இடத்திலும் உள்ளன.மத்திய அரசின் நகர்ப்புற சீர்திருத்த திட்டங்கள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பையின் வளர்ச்சி, 7 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.மேலும், பன்னாட்டு நிறுவனங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கு, மும்பை, மையப் புள்ளியாக விளங்குவதால் அங்கு தலைமை அலுவலகத்தை அமைக்க, பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்ற, 10 ஆண்டுகளில், மும்பையில் தலைமை அலுவலகத்தை அமைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, 50 சதவீதம் அதிகரித்து, 2,000க்கும் மேலாக உயர்ந்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.