மிகவும் சக்தி வாய்ந்த ஐதரசன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. இந்த ஐதரசன் வெடிகுண்டு அணு குண்டுகளை விடவும் சக்தி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா மேற்கொண்ட ஐதரசன் வெடிகுண்டு சோதனை காரணமாக அந்தப்பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தென் கொரியாவின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முன்னதாக, இது சாதாரண நிலநடுக்கம் என வடகொரிய மக்கள் நம்பிவந்த நிலையில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா இராணுவ வட்டாரங்களும் ஜப்பானும் சந்தேகம் எழுப்பின.
இந்நிலையில், இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வட கொரியா, ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த செயற்பாட்டானது, உலக நாடுகளை நிமிர்ந்துப் பார்க்கும்படி செய்திருக்கும் நிலையில் பிராந்தியத்தில் சற்று பதற்ற நிலயை தோற்றுவித்துள்ளது.
வடகொரியா மேற்கொண்ட ஐதரசன் வெடிகுண்டு சோதனையை அடுத்து தென் கொரியா தனது இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட கூட்டத்தை கூட்டியுள்ளது.
இதற்கிடையில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறிய வகையில் இன்று ஐதரசன் வெடிகுண்டை பரிசோதித்திருக்கும் வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி தருவோம் என ஜப்பான் எச்சரித்துள்ளது.
இந்த செயற்பாட்டிற்கு வட கொரிய நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.