
தமிழகத்தில் பொங்கல் தினத்தையொட்டி பிரதானமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையில் முக்கிய அம்சங்களில் ஜல்லிக்கட்டும் ஒன்று. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பிராணிகள் நல ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினர். இதற்காக நீதிமன்றத்துக்கும் போய் தடை உத்தரவு பெற்றனர்.
இருப்பினும் தமிழக அரசு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது உரிய நிபந்தனைகளை பின்பற்றவில்லை எனக் கூறி இதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு இந்த தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பப்பட்டது. இதற்காக அனைத்து கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் நேற்றைய திகதியிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் மாட்டு வண்டிப் பந்தையங்கள் ஆகியவற்றில் காட்சிப் படுத்தும் மிருகங்களாக பயிற்றுவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மாவட்டவாரியாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.





