வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நான்கு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தையும் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர் ஒருவரையும் மேலும் நால்வரையும் கடந்த 2ஆம் திகதி கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதான சந்தேக நபர்கள் வவுனியா மற்றும் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து ரி 56 ரைபிள் உட்பட தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த மே 6ஆம் திகதி வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த வீடொன்றில் துப்பாக்கியைக் காட்டி வீட்டாரை அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்டது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரரே இக்கொள்ளையை திட்டமிட்டு நடத்தியுள்ளதாகவும் இந்த இராணுவ வீரர் வவுனியா இராணுவ தலைமையகத்தில் கடமையாற்றி வருவதாகவும் கடமையின் நிமித்தம் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை இக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.