வீட்டை உடைத்து கொள்ளையிட்டு சுற்றுலா சென்ற 3 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது!!

969

1 (8)

வீட்டை உடைத்து 2,30,000 ரூபாவை கொள்ளையிட்டதாக கூறப்படும் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் முந்தல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உடப்பு பகுதியைச் சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவர் மற்றும் அவரது 16, 17 மற்றும் 19 வயதான மூன்று நண்பர்களுமே இவ்வாறு கைதாகியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் உடப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தகரின் வீடொன்றில் கடந்த 15ம் திகதி நுழைந்து அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டுள்ளனர். இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தார். இதன்படி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முதலில் 14 வயதான பாடசாலை மாணவரைக் கைதுசெய்துள்ளனர். இதனையடுத்து ஏனைய சந்தேகநபர்கள் குறித்து தகவல் வௌியான நிலையில் அவர்களையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்கள் கொள்ளையிட்ட பணத்தைக் கொண்டு வாடகைக்கு வாகனம் ஒன்றைப் பெற்று சுற்றுலா சென்றதாகவும், நான்கு கைபேசிகள், ஆடைகள் போன்றவற்றையும் கொள்வனவு செய்ததாகவும், எஞ்சிய பணத்தை உணவு மற்றும் பாணங்களை வாங்க பயன்படுத்தியுள்ளதாகவும், பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பின்னர் பொலிஸாரால் குறித்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஆடைகள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.