
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடைபெற்றது.
இதில் தவானுடன் ஜோடி சேர்ந்து அசத்திய விராட் கோஹ்லி 84 பந்துகளில் 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் சதம் கடந்தார். ஒருநாள் போட்டியில் இது அவரது 25வது சதம் ஆகும்.இதன்மூலம், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காராவின் சாதனையை சமன் செய்துள்ளார். அத்துடன் மிகவேகமாக 25 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் கோஹ்லி சங்கக்காராவுடன் 4வது இடத்தில் இருக்கிறார். 49 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். ரிக்கி பொண்டிங் (30), ஜெயசூர்யா (28) இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.மெல்போர்னில் கடந்த 17ம் திகதி நடந்த போட்டியிலும் சதம் அடித்த கோஹ்லி, அதிவேகமாக 7000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.





