சுன்னாக நிலத்தடி நீர் சர்ச்சை – குடிநீர் வழங்கள் நிறுத்தப்பட்டமையால் மக்கள் அவலம்!!

670

13-water-tab

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்தமை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜே-196 கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட சுன்னாகம் தெற்குப் பகுதியில், வடமாகாண விவசாய அமைச்சு வலி. தெற்குப் பிரதேச சபையூடாக மேற்கொண்டு வந்த குடிநீர் விநியோகம் கடந்த இரு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளமையால் இப் பகுதியைச் சேர்ந்த 25ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவலநிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் தாம் தமது பகுதிக் கிராம சேவகர், வலி. தெற்குப் பிரதேச சபை, உடுவில் பிரதேச செயலகம் ஆகியவற்றிற்குப் பல தடவைகள் அறிவித்தும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் கடந்த மாதம் 30ம் திகதி இப் பகுதி மக்கள் சார்பாக உடுவில் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, ஜனவரி மாதம் -1ம் திகதியிலிருந்து கழிவு எண்ணையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், அவ்வாறு எதுவும் இடம்பெறாத நிலையில் எமது பகுதிக்கான குடிதண்ணீர் விநியோகத்தை மாத்திரம் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் எனவும் இப் பகுதி மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

“முதலில் எங்கள் பகுதியில் இரண்டாயிரம் லீற்றர் குடிநீர் தாங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் பின்னர் அதனை எடுத்து விட்டு ஆயிரம் லீற்றர் கொள்ளவுடைய குடிநீர்த் தாங்கியைக் கொண்டு வந்து வைத்தார்கள். தற்போது அந்த நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளமையால் நாங்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றோம். இந்தப் பகுதியில் பத்து வரையான குடும்பங்கள் பலாலியிலிருந்து இடம்பெயர்ந்து வசித்து வருகிறோம். குடி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளமையால் நாங்கள் நீண்ட தூரம் பயணித்தே குடிநீரைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால்,ஏனைய தேவைகளுக்கு நாங்கள் எங்கள் கிணற்று நீரையே பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக நாங்களும் எங்கள் குழந்தைகளும் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறோம்,” என அப் பகுதி பெண்ணொருவர் குறிப்பிட்டார்.

மேலும் “சுன்னாகம் ஜே.196 கிராம சேவகர் பிரிவில் நாம் வசித்து வருகின்றோம். நாங்கள் சுன்னாகம் மின்சாரசபையிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் வசித்து வருகிறோம். கடந்த இரு மாத காலமாக எங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படாத காரணத்தால் நாங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகிறோம். நீர் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்ட காரணத்தால் குடிப்பதற்கான நீரைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டியுள்ளது. ஆன போதும் சாப்பாட்டுக்கு நாங்கள் எங்கள் கிணற்று நீரையே பயன்படுத்தி வருகிறோம். தண்ணி என்ன காரணத்துக்காக தாங்கிகளில் நிரப்பாமல் விட்டது என உரியவர்கள் ஏன் இன்னும் சொல்லவில்லை?” எனவும் அப் பகுதி மக்கள் கேள்வியெழுப்பினார்.

ஐந்து தடவைகள் எமது பகுதியிலிருந்து கிணற்று நீருக்கான மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்ட போதும் இதுவரை எமது கிணற்று நீரைக் குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? என்ற முடிவு இதுவரை சொல்லப்படவில்லை என விசனம் தெரிவிக்கும் மக்கள், நிறுத்தப்பட்ட குடிதண்ணீர் விநியோகத்தை மீளவும் செயற்படுத்த உரிய தரப்பினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.