சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்ந்த 5 பேர் கைது!!

388

1067432066jem

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி நேற்று (25) இரவு ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனா். இந்த பகுதியில் இவர்கள் பல நாட்களாக இவ்வாறு சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் ஹட்டன் நீதவான் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.