
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி நடத்திய’ ஐபா உற்சவம்’ விழாவில் பாகுபலி திரைப்படத்துக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளதோடு கடந்த வருடத்தின் சிறந்த வில்லன் நடிகராக அரவிந்சாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ் விழா நேற்றுமுன்தினம் ஹைதராபாத்தில் ஆரம்பமாகியது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியான ‘பாகுபலி’ சிறந்த திரைப்படமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் விருது பெற்றனர்.
‘தனி ஒருவன்’ திரைப்படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. நயன்தாராவுக்கு ‘மாயா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. ‘காஞ்சனா–2’ சிறந்த திகில் நகைச்சுவை திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது. இதில் நடித்த கோவை சரளாவுக்கு சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது கிடைத்தது. தனி ஒருவன் படத்தில் நடித்த அரவிந்சாமிக்கு சிறந்த வில்லனுக்கான விருது கிடைக்கப்பெற்றது. கத்தி’ திரைப்படத்துக்கு இசையமைத்த அனிருத் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை பெற்றார்.





