
சென்னையில் மின்சார ரயில் தண்டவாளத்தில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி ஜேம்ஸ் தெருவைச் சேர்ந்த சுகுமாரன் என்பவரின் மகன் தினேஷ் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நேற்று தினேஷ் தனது நண்பருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்றுள்ளார்.பின்னர் அங்கிருந்து மாலை 5 மணி அளவில் வீடு திரும்பிய போது நண்பர்கள் 2 பேரும் வண்டலூர் ரயில் நிலைய தண்டவாளம் அருகே நடந்து வந்துள்ளனர்.அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது.தினேஷ், ரயில் தன்னை கடந்து செல்லும் காட்சியை செல்ஃபி படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
அவ்வாறு செல்ஃபி எடுக்க முயன்றபோது வேகமாக வந்த மின்சார ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியதில் உடல் சிதறி மாணவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.தகவல் கிடைத்ததும் தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.





