
2016ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸின் ஒற்றையர் பிரிவில் சம்பியனானார் கெர்பர்.பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும், 7ஆம் இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.
21 கிராண்ட்ஸ்லாம் பதக்கத்தை வென்றுள்ள செரீனா, 22ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்று ஸ்டெபி கிராப் சாதனையை சமன் செய்யும் நோக்கத்தில் களம் இறங்கினார். பலம் பொருந்திய செரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாமை ருசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கெர்பர் களம் இறங்கினார்.இப்போட்டியில், அனுபவம் வாய்ந்த செரீனா எளிதில் கெர்பரை வீழ்த்தி விடுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கெர்பர் செரீனாவிற்கு கடும் சவாலாக விளங்கினார்.
பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் முதல் செட்டை 6–-4 என கெர்பர் கைப்பற்றினார். தனது அனுபவத்தால் சுதாரித்து விளையாடிய செரீனா 2ஆவது செட்டை 6-–3 எனக் கைப்பற்றினார். 3ஆவது மற்றும் கடைசி செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள்.ஒரு கட்டத்தில் கெர்பர் 5-–3 என முன்னிலையில் இருந்தார். செரினாவின் அனல்பறக்கும் சர்வீஸ்களை கெர்பர் எளிதாக முறியடித்து அந்த செட்டை 6-–4 எனக் கைப்பற்றி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.





