
இலங்கைக்கு கடத்த நூதனமான முறையில் பொதி செய்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஹெரோயின் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் சென்னை – மண்ணடி தம்பு செட்டி தெருவில் ஒரு துணி களஞ்சியசாலையில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, கடந்த 2012 ஜூலை 8ம் திகதி வருவாய் புலனாய்வு பிரிவு பொலிசார் அங்கு சோதனை செய்தனர்.
அப்போது, சுடிதார் துணிகளை ஏற்றுமதி செய்வதுபோல் அதனுள் ஹெரோயின் பாக்கெட்டுகளை வைத்து பொதி செய்திருந்தமை தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் 3 கிலோ 785 கிராம் எடையுள்ள ஹெரோயின் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.4 கோடியாகும் (இந்திய ரூபாய்). விசாரணையில் ஹெரோயினை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது என, தமிழக ஊடகமான தினகரன் குறிப்பிட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ணன் ஸ்ரீதரன் ராஜேந்திரன் (31), மண்ணடியைச் சேர்ந்த சாவல் சிமன்ராம் (34) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அத்துடன், இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த பாபுலால் என்பவர் தலைமறைவானார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.1 இலட்சத்து 18 ஆயிரம் ரொக்கம் (இந்திய பணம்) மற்றும் அமெரிக்க, இலங்கை பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சந்தேகநபர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி கோமதி ஜெயம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.





