
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிகட்சியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) உறுப்பினரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன், அந்தக் கட்சியிலிருந்து விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார்.
இதற்கான விண்ணப்பத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகமான யாழ். மார்டின் வீதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தனின் 83ஆவது பிறந்தநாளான நேற்று இந்த இணைவு இடம்பெற்றுள்ளது.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி சார்பில் சி.சிவமோகன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர் அந்தக் கட்சியின் மத்திய குழுவிலும் இணைந்திருந்தார். அதேவேளை கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதும், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சிவமோகன் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சார்பிலேயே அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில், நேற்றைய தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக அவர் இணைந்துகொண்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைவதற்கான விண்ணப்பத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்தார். அதனைப் பரிசீலித்த அவர், கட்சியின் அங்கத்துவத்தை வழங்கினார்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன், தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோருடன் கட்சி அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





