சென்னையில் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமா? விலை ரூ.975!!

418

hospital

சென்னையில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், சுவாசிக்க சுத்தமான காற்றை தனியார் நிறுவனம் ஒன்று விற்பனை செய்ய துவங்கியுள்ளது.டெல்லி, சென்னை போன்ற மாநகரங்களில், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அதிகரித்து வருகிறது.

எழும்பூரில், ‘இனவேட்டிவ்’ என்ற தனியார் நிறுவனம், ஆக்ஸிஜன் குடுவைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.ஒரு குடுவையில், 120 முறை சுவாசிக்கும் அளவிற்கான, 99.6 சதவீதம் துாய்மையான ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டுள்ளது.அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் உள்ள அந்த குடுவையின் விலை, 975 ரூபாயாகும்.

மூச்சு திணறல் உள்ளவர்கள், மலையேற்றம், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இக்குடுவைகள் பயனுள்ளதாக இருக்கும்.மேலும், நாள் முழுவதும், துாசி காற்றில், வெளியில் அலைந்து வருவோர், மருத்துவர் ஆலோசனையின் படி, ஓரிரு முறை இக்குடுவையில் உள்ள ஆக்ஸிஜனை சுவாசித்தால் புத்துணர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், காற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதா என்ற கவலைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.மருத்துவர்களின் அறிவுறுத்தல் இன்றி இப்படியான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விற்பதை அரசாங்கம் அனுமதிக்க முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.