
ஓடும் ரயிலில் எலிக்கடித்த பயணிக்கு ரயில்வே நிர்வாகம் ரூ.13 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த சி.ஜே.புஷ், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 11ம் திகதி துரந்தோ விரைவு ரயிலில் 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணித்துள்ளார்.
அவர் தூங்கி கொண்டிருந்த போது ரயில் பெட்டிக்குள் சுற்றித் திரிந்த எலி ஒன்று, அவரது விரலைக் கடித்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.ஆனாலும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை.
பின்னர் எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் எலிக்கடிக்கு அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.இதை தொடர்ந்து எலிக் கடியால் ஏற்பட்ட மருத்துவச் செலவிற்கு நஷ்ட ஈடு தரக்கோரி, அவர் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதில், ரயில்வே நிர்வாகம் சேவை குறைபாட்டுடன் செயல்பட்டதால் மனுதாரருக்கு ரூ.13 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.





