வவுனியா மாணவியின் கொலையைக் கண்டித்து யாழ், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவில் கர்த்தால்!!

640

 
வவுனியா மாணவியின் படுகொலையை கண்டித்து யாழில் ஹர்த்தால்

வவுனியா மாணவி ஹரிஷ்ணவி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.நகரில் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்.வணிகர் கழகம், யாழ்.பல்கலைகழகம் உள்ளிட்ட சமூக அமைப்புகள், சிவில் அமைப்புகள் இன்றைய தினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்ததுடன், தனியார் போக்குவரத்து பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.

இ.போ.ச பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தன, வங்கிகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டன, மேலும் உணவகங்கள், மருந்து கடைகளுக்கு விதிவிலக்களிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான உணவகங்கள், மருந்து கடைகள் திறந்திருந்தன.

1 2 3 4 5

ஹரிஷ்ணவிக்கு நீதிகோரி இன்று கிளிநொச்சி ஸ்தம்பிதம்- முல்லைத்தீவும் முடங்கியது

வவுனியாவில் அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி ஹரிஷ்ணவியின் மரணத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த கோரி இன்று கிளிநொச்சி ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இன்று காலை முதல் கிளிநொச்சியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், தனியார் பேருந்து சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் இருப்பினும் இலங்கை போக்குவரத்து சேவையின் ஒரு சில பேருந்துகள் சேவையில் இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதில், கிளிநொச்சி வணிகர் சங்கத்தினர் , தனியார் வங்கிகள் மற்றும் கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் என்பன இணைந்துள்ளன.

எனினும், இன்றையதினம் வட மாகாணத்தின் எந்தவொரு பாடசாலையும் மூடப்பட மாட்டாதென தெரிவிக்கப்பட்ட போதும் . கிளிநொச்சியில் மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் பாடசாலைகளும் இயங்காமல் உள்ளது.

6 7 8 9 11 12 13 14 15

மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பகிஸ்கரிப்பு

பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து இன்று புதன் கிழமை (24) மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் சகல விதமான போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டு பணிப்பகிஸ்கரிப்பு இடம் பெற்று வருகின்றது

வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து வடக்கில் தொடர்ச்சியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், கண்டன ஊர்வலங்களும் இடம் பெற்று வருகின்ற நிலையில் மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் தமது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை 6 மணிமுதல் மன்னார் தனியார் பேருந்து சங்கத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்குமான சகல விதமான போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டது.

இதனால் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளுக்கு போக்குவரத்தை மேற்கொள்ளவிருந்த அரச திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

மற்றும் உள்ளூர் சேவைகளும் இடம் பெறாமையினால் தூர இடங்களில் இருந்து பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் தாமதித்தே பாடசாலைக்குச் செல்லக்கூடியதாக அமைந்திருந்தது.

எனினும் மன்னாரில் அரச போக்குவரத்துச் சேவையின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது.

பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றது.

மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் மாத்திரமே தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 21 22 23 24