மக்களின் போராட்டங்களை புரிந்துகொண்டு குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் : ப.உதயராசா!!

1209

Uthayarasa1

அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகளின் உச்சகட்டமாக வவுனியா கூமாங்குளத்தில் 13 வயது சிறுமியான ஹரிஷ்ணவியின் மீது காம கொடூரர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமை படுகொலை அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

புங்குடுதீவு வித்தியாவின் படுகொலை இடம்பெற்று ஒரு வருடம்கூட பூர்த்தியாகாத நிலையில் அதே வகையிலான கொடூரச்செயல் அரங்கேறி உள்ளமை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை அண்மையில் நடந்த போராட்டங்களில் மக்களின் பங்களிப்புக்களில் இருந்து அறியமுடிகின்றது.

சரியான அறிவித்தல்களோ அச்சுறுத்தல்களோ இன்றி மக்கள் தாமாகவே முன்வந்து நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் தமது விற்பனை நிலையங்களை மூடி பூரண கார்த்தாலை கடைப்பிடித்தமை மன ஆறுதலை தந்தாலும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு காவல்துறையினரும் அரசும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பு அணிகளை அமைத்து குற்றவாளிகளை இனம் கண்டு நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்கி வழங்கப்பட்ட தண்டனையை வெளிப்படுத்துவதன் மூலமாக இவ்வாறான சமூக விரோதிகளுக்கு பாடம் புகட்டவேண்டும் எனக்கோருவதுடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வித்தியாவின் கொலை சந்தேக நபர்களினதும் குற்றத்தை நிருபித்து தண்டனை வழங்குவதன் மூலம் இவ்வாறான கொடியவர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையினை வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் “நமக்கு ஏன் வீண் வம்பு” என எண்ணாமல் தமக்கு தெரிந்த தகவல்களை காவல்துறையினருக்கு வழங்கி குற்றவாளிகளை இனம்காண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதே வேளை இனிவரும் காலங்களில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதை தவிர்க்க பெற்றோரும் தமது பிள்ளைகளை குறிப்பாக பெண்பிள்ளைகளை பாதுகாப்பு உணர்வோடு வளர்க முயற்சிக்க வேண்டுவதுடன் அவர்களது தனிமையான இருப்பையும் நடமாட்டங்களையும் இயன்ற அளவிற்கு தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வதுடன்

வவுனியாவில் 23.02.2016 அன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உணர்வுகளை வெளிப்படுத்தியவர்களுக்கும் 24.02.2016 அன்று இடம்பெற்ற கடையடைப்பிற்கு ஒத்துழைத்த அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உணர்வுபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் வடக்கு கிழக்கில் ஏனைய மாவட்டங்களிலும் போராட்டங்களை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு நாட்டின் எந்தப் பகுதியிலும் இனிவரும் காலங்களில் இவ்வாறான கொடூர செயல்கள் இடம்பெறாமல் இருக்க அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கேட்டு நிற்கின்றேன்.

நன்றி
ப.உதயராசா
செயலாளர் நாயகம்
ஸ்ரீ ரெலோ