
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.இந்தியா- இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று நடந்தது.இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திக்குமுக்காடியது.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 89 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணி சார்பில் எக்தா பிஷ்த் 3 விக்கெட்டும், அனுஜா பட்டீல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.இதன் பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது.
இதனால் 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 91 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.அதிகபட்சமாக மன்தனா ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களும், வனிதா 34 ஓட்டங்களும் எடுத்தனர்.இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஏற்கனவே ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, தற்போது டி20 தொடரிலும் இலங்கை அணியை ’ஒயிட்- வாஷ்’ செய்துள்ளது.





