
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருகே நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காரில் வந்த மூன்று தற்கொலை தாக்குதல்தாரிகள், தூதரகத்துக்கு அரு கேயுள்ள சோதனைச் சாவடியின் அருகாமையில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அருகேயுள்ள மசூதிக்கு வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேநேரம் இந்திய தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக நான்கர்ஹார் மாகாண காவல்துறைத் துணைத் தலைவர் மவுசம் கான் ஹசிம் கூறியுள்ளார்.
தனது தூதரகத்தில் வேலை செய்யும் அனைவரும் பத்திரமாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என்று தலிபான் அமைப்பின் பேச்சாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் இந்திய அலுவலகங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டு காபூலில் இருக்கும் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது.
-BBC தமிழ்-





