
பண்டாரவளை – பூணாகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவற்றால் நேற்று 93 மாணவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
எவ்வாறாயினும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய குறித்த பாடசாலை மாணவர்களுக்கு நேற்று காலை உணவுக்குப் பின்னர் விற்றமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தரம் 8,9,10 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கே அயன் மாத்திரைகள் உள்ளிட்ட விற்றமின்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து நேற்று பிற்பகல் சுகயீனமுற்ற நிலையில் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டாரவளைப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளின் மாதிரிகளை, வைத்திய ஆய்வுபிரிவிற்கும் அனுப்பியுள்ளனர்.
இம்மாத்திரைகள் 2018ம் ஆண்டுவரை பாவிக்கலாமென்றும் கால எல்லை குறிப்பிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது பற்றி வித்தியாலய அதிபர் ரெ.மோகனிடம் வினவிய போது, ‘’உணவு உண்ட பின்னரே, இம்மாத்திரைகளை விழுங்க வேண்டும். ஆனால், மாணவ மாணவிகள் உணவு உண்ணாமலேயே மாத்திரைகளை விழுங்குவதும் நோய்வாய்ப்படுவதற்கு ஒரு காரணமாகும்’’ என்று கூறினார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





