
பேஸ்புக் மூலமாக அரிய வகை, கரடிகள், குரங்குகளை விற்று வருவது அதிகரித்து வருவதாக மலேசியாவைச் சேர்ந்த டிராபிக் என்ற அமைப்பு கூறியுள்ளது. உலக வன விலங்குகள் தினமான இன்று இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் டிராபிக் அமைப்பு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்கள் இப்போது மிகவும் பிரபலமாக உள்ளன.
இப்போது அரிய வகை விலங்குகளையும் இதன் மூலமாக விற்கும் செயல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலேசியாவில் இந்த செயல் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் மலேசியாவைச் சேர்ந்த 14 பேஸ்புக் குரூப்களைக் கண்காணித்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த குரூப்கள் மூலமாக 300க்கும் மேற்பட்ட அரியவகை விலங்குகள் விற்கப்பட்டுள்ளன. சூரியக் கரடி, ஜிப்பான் வகை குரங்குகள், ஓட்டர்கள், பின்டுராங், கரடி பூனை உள்ளிட்டவை இதில் அடக்கம். இந்த 14 பேஸ்புக் குரூப்களும் தற்போது மூடப்பட்டு விட்டன. ஆனால் அதில் கிட்டத்தட்ட 68,000 உறுப்பினர்கள் உள்ளனர்.இவர்கள் தற்போது தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். இந்த குரூப்களில் உள்ளவர்களை முடக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.





