
கிரீஸ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் ரொட்டி துண்டு விநியோகிக்கப்பட்டபோது, அதனை பெறுவதற்கு அகதிகள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்ட பரிதாப காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேற வரும் அகதிகளில் ஆயிரக்கணக்கானோர் தற்போது கிரீஸ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிரீஸில் உள்ள இடோமெனி என்ற கிராமத்தில் உள்ள இந்த முகாமை சேர்ந்த அகதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.ஐரோப்பாவிற்கு குடியேற வரும் அகதிகளின் நலனிற்காக தங்களுடைய நாடுகளின் எல்லைகளை திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த சூழலில் அகதிகளுக்கு உணவு பரிமாரப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஒரு சிலருக்கு ரொட்டி துண்டுகள் கிடைக்காமல் போகவே திடீரென கலவரம் மூண்டுள்ளது.அகதிகளில் சிலர் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக்கொண்டனர். சிலர் கற்களை எடுத்து மற்றவர்கள் மீது வீசி ரத்தக் காயங்களை ஏற்படுத்தினர்.
விரைந்து செயல்பட்ட எல்லை பாதுகாப்பு பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை அடக்கினர்.எனினும், இந்த தாக்குதலில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கலவரம் நிகழ்ந்த இந்த முகாமில் மட்டும் சுமார் 13,000 அகதிகள் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





