
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான T20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இந்தப் போட்டிகள் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு மாலையில் கடுமையாக மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மாலை 07.30க்குத் தொடங்குவதாக இருந்த ஆட்டம் 8.10க்கே ஆரம்பமானது. அதன் பிறகு போட்டிக்கான ஓவர்கள் குறைக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் 18 ஓவர்கள் வீச முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் பந்து வீச்சைத் தேர்வுசெய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.
119 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 15.5 ஓவர்களில் 119 ஓட்டங்களை பெற்று இன்றைய போட்டியை தமதாக்கிக் கொண்டது.
விராட் கோலி 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்தார்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய 11 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது என்பது விஷேட அம்சமாகும்.





