
ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படம் 330 கோடி ரூபாவிற்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய திரை உலகில் அதிகபட்ச காப்பீட்டு வசதி பெற்ற திரைப்படம் என்ற பெருமையை இது பெறுகிறது.
இந்தியாவில் திரைப்படத்திற்கு காப்பீடு செய்யும் வழக்கத்தை பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ் கய் ஆரம்பித்து வைத்தார். 1999 ஆம் ஆண்டில் வெளியான அவரது ‘டால்’ திரைப்படம் முதல் முறையாக காப்பீடு செய்யப்பட்டது.
திரைப்படத்திற்கு காப்பீடு என்பது படப்பிடிப்பு தொடங்கி, திரையரங்கில் வெளியாவது வரை நீடிக்கிறது. இதன்படி படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, பொருள்கள் சேதம் போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது.
திரையுலகில் ஏற்கனவே பல படங்கள் பெரும் தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன தில்வாலே, ஏர்லிப்ட் ஆகிய படங்கள் 100 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டன. அமீர்கான் நடித்த பி.கே மற்றும் சல்மான் கானின் கிக் ஆகிய படங்கள் தலா 300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது.
இதுவரை அந்த இரண்டு படங்கள்தான் காப்புறுதி விடயத்தில் சாதனை அளவுகளை தொட்டிருந்தன. ஆனால் ரஜினியின் ‘எந்திரன் 2’ 330 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு முந்தைய சாதனை அளவுகளை முறியடித்திருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்க ‘எந்திரன் 2’ மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் ரஜினி ஜோடியாக எமி ஜக்சன் நடிக்கிறார். பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லன் பாத்திரம் ஏற்றுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஒரியண்டல் இன்ஷூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ‘எந்திரன் 2’ தயாரிப்பிற்கான காப்பீட்டு வசதியை அளித்திருக்கின்றன.
எந்திரன் 2 திரைப்படம் மற்றொரு அம்சத்திலும் புதிய சாதனை அளவை எட்டியிருக்கிறது. தமிழுடன் வேறு சில மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தில் நடிக்கும் நான்கு முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் மட்டும் 150 கோடி என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டில் இது திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





