இறந்ததாக கருதப்பட்ட மாணவி உயிர் பிழைத்த அதிசயம்!!

429

1 (44)

இறந்ததாக கருதப்பட்ட மாணவி உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கீழ்தெரு பகுதியை சேர்ந்தவ பாட்ஷா பரீதா தம்பதியருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இதில், மூத்த மகள் யாஸ்மின் (16), சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 19ம் திகதி இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாட்ஷா, மகள் யாஸ்மினை திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த யாஸ்மின் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து பூச்சி மருந்தை குடித்துள்ளார்.இதையடுத்து சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் அவரை இனி காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூறிய நிலையில் நேற்று முன் தினம் யாஸ்மின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.அவசர ஊர்தியில் யாஸ்மினை வீட்டிற்கு அழைத்து சென்றபோது யாஸ்மின், திடீரென பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளார்.அவர் இறந்து விட்டதாக நினைத்த பெற்றோர் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, நேற்று முன் தினம் மாலை உறவினர்கள் அவரது வீட்டில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, உறவினர் ஒருவர் யாஸ்மினின் கையை பிடித்து பார்த்த போது நாடி துடிப்பு இருந்ததை அறிந்து ஆச்சர்யமடைந்துள்ளார்.எனவே அவரை உடனடியாக சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.