
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நாக்பூரில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
வழக்கம் போல் முகமது சஷாத் அதிரடியுடன் ஆரம்பித்தார். அவர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்தவர்கள் சோபிக்கவில்லை. அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
நஜிபுல்லா மட்டும் நிதானமாக ஆடி 48 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 123 ஓட்டங்கள் குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், சாமுல் பத்ரி 3 விக்கெட்டுகளையும், ரஸல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதன் பின்னர் 124 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியால் 3 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
20 ஓவரில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 117 ஓட்டங்களே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக, ஜோன்சன் ஜார்லஸ் 22 ஓட்டங்களையும், வெய்ன் பிராவோ 28 ஓட்டங்களை எடுத்தனர்.
ஆப்கான் அணியின் தரப்பில், முகமது நபி, ரசித் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த தோல்வியால் மேற்கிந்திய தீவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
அதேசமயம் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கான் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி விளையாடிய 4 போட்டிகளில் 1ல் வெற்றி பெற்றுள்ளது.





