அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி!!

449

IND

உலகக் கிண்ண டி20 போட்டியில் விராட் கோலியின் அதிரடியால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதிக்கான 4 வது அணியைத் தேர்வு செய்வதற்கான முக்கிய போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மொஹாலி மைதானத்தில் போட்டியிட்டன.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முதலில் துடுப்பாடும் முடிவை மேற்கொண்டார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் அமோகமாக இருந்தாலும் அவர்கள் இறுதிநேரத்தில் அதிரடி காட்ட முடியாதளவுக்கு இந்தியப் பந்து வீச்சாளர்களால் தடுக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலியா சார்பில் இன்றைய போட்டியின் ஆரம்ப வீரர்களாக களம்புகுந்த உஸ்மான் கவாஜா மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் அடித்தாடுவதில் ஆர்வம் காட்டினர்.போட்டியின் முதலாவது பந்து வீச்சிலேயே கவாஜா அதிரடியாக 4 ஓட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.அதன் பின்னரான 5 பந்துகளிலும் எந்தவிதமான ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காது சிறப்பக பந்துவீசி முடித்தார் ஆசிஷ் நெஹ்ரா.

ஆயினும் 2 வது ஓவரை பந்துவீச அழைக்கப்பட்ட பூம்ராவின் ஓவரை கவாஜா துவம்சம் செய்தார்.அந்த ஓவரில் மட்டும் ஹட் ட்ரிக் பவுண்டரி அடிக்க பூம்ரா தனது முதல் ஓவரிலேயே 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.

பின்னர் பந்து வீச்சில் மாற்றம் கொண்டுவந்த டோனி, திருப்புமுனையை ஏற்படுத்த அவரது நம்பிக்கைக்குரிய சுழல் ஆயுதமான அஸ்வின் கையில் பந்தை ஒப்படைத்தார்.

யாரைக் குறிவைக்க வேண்டும் என்பதை ஆரம்பம் முதலே கணித்து அடித்தாடும் அவுஸ்திரேலியர்களின் தந்திரோபாயத்தில் அகப்பட்டுப்போனார் அஸ்வின்.

ஆரோன் பிஞ்ச் அடித்த 2 ஆறு ஓட்டங்களோடு அந்த ஓவரில் மட்டும் 22 ஓட்டங்களை இன்று விட்டுக்கொடுத்தார்.அஸ்வினின் பந்துவீச்சில் இதே அவுஸ்திரேலிய அணி ஒரே ஓவரில் 2003 இல் 24 ஓட்டங்களைப் பெற்றமையும் நினைவுபடுத்தக்கூடியதே. இப்படியான அதிரடி மூலமாக அவுஸ்திரேலிய அணி 3.4 வது ஓவரிலேயே தங்களது 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் 5 வது ஓவரின் முதல் பந்துவீச்சில் உஸ்மான் கவாஜாவை நெஹ்ரா ஆட்டமிழக்க செய்ய, போட்டியின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது.

அவுஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 10-15 ஓவர்கள வரையில் அவுஸ்திரேலிய அணியால் 33 ஓட்டங்களையே பெறமுடிந்தது.அதன்பின்னரான 16 வது ஓவரில் ஜடேஜா 15 ஓட்டங்களையும், 17 வது ஓவரில் பூம்ரா 15 ஓட்டங்களையும் விட்டுக்கொடுத்தாலும் ,18 வது 19 வது ஓவர்களில் அவுஸ்திரேலியாவால் அதிரடி காட்ட முடியாது போனது.

அந்த அணி இறுதி 5 ஓவர்களில் 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

161 ஓட்டங்கள் எனும் இலக்கு இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவுக்கு, இந்தியா மைதானத்தில் இந்த ஓட்ட எண்ணிக்கை மிகக்கடினமானதாக இருக்கும் என்று யாரும் கணித்திருக்கவில்லை.

ஆனாலும் இந்த தொடர் முழுவதும் சொதப்பும் இந்தியாவின் ஆரம்ப நிலைத் துடுப்பாட்ட வீரர்களின் அசமந்த செயற்பாடு அவுஸ்திரேலியாவுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தது.

எல்லாப் போட்டிகளையும் போன்று நெருக்கடியான கட்டத்தில் மிக நல்ல, பெறுமதியான இணைப்பாட்டத்தைக் கொடுக்கும் யுவ்ராஜ் இன்று தன் சொந்த மண்ணில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாலும் கோஹ்லியுடன் இணைத்து 45 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுகொடுத்தார்.

முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை மட்டுமே பெற்றுத் தட்டுத்தடுமாறிய இந்தியாவுக்கு விராட் கொஹ்லி தனித்து நின்று வெற்றிக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

விரட்டிப் பிடித்து போட்டியை வெற்றிகொள்வதில் சூரனாய் இருக்கும் விராட் கொஹ்லியே இன்றும் அவுஸ்திரேலியாவுக்கு வில்லனானார். விராட் கொஹ்லி T20 போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடும் போது அவருடைய சராசரி 42 ஆகவும், 2 வதாக வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடுகையில் கோஹ்லியின் சராசரி 122 என்பதும் கவனிக்கத்தக்கது.

இறுதி 5 ஓவர்களில் 59 ஓட்டங்கள் தேவையெனும் நிலையில் போல்க்னரின் 18 வது ஓவரில் 19 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இந்தியாவுக்கு வெற்றி இலகுபடுத்தப்பட்டது. பின்னர் 19 வது ஓவரில் 16 ஓட்டங்களும் பெறப்பட இறுதி ஓவரில் நான்கு ஓட்டங்கள் தேவை எனும் நிலை வந்தது.

டோனி தனக்கே உரித்தான பாணியில் போட்டியை முடித்து வைக்க 5 பந்துகள் மீதமான நிலையில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அரை இறுதியை எட்டிப் பிடித்திருக்கிறது.

இன்றைய தோல்வி மூலமாக அவுஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 6 வது தடவையாகவும் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது. அத்தோடு 6 வது உலக கிண்ணத் தொடரிலும் கிண்ணத்தை வெற்றிகொள்ள முடியாத வேதனையோடு தொடருக்கு விடைகொடுத்தது அவுஸ்திரேலியா.

இன்று சிறப்பாக சகல வழிகளிலும் அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஷோன் வட்சன் சர்வதேச போட்டிகளிலிருந்து வேதனையோடு விடைபெற்றார்.

இதுவரையான அத்தனை T20 உலக கிண்ணப் போட்டிகளிலும் கலந்துகொண்ட 19 வீரர்களில் வோட்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அரை இறுதிக்கு நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் தேர்வான நிலையில், ஒரேயொரு ஆசிய அணியாக இன்றைய வெற்றிமூலமாக 4 வது அணியாக அரை இறுதிக்குள் இந்தியா நுழைந்தது.

அரை இறுதியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை சந்திக்கவுள்ளது.