இலங்கை சாரணர் சங்கத்தின் முன்னாள் பிரதம ஆணையாளரும், ஆசிய பசுபிக் சாரண வலயத்தின் முகாமைத்துவ உப குழுவின் முன்னாள் பணிப்பாளரும், 2014-2016 ஆம் ஆண்டுக்கான சாரணர் சங்கத்தின் தலைவருமான கௌரவ C.பட்டுவன்கல அவர்கள் கடந்த 25.03.2016 அன்று கொழும்பில் காலமானார்.
இவரின் இறுதி நிகழ்வுகள் நேற்று கொழும்பில் சாரண மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தினால் கடந்த மூன்று தினங்கள் சாரண தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டு, மாவட்டங்கள் தோறும் சாரண கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் வவுனியா திரி சாரணர், ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அஞ்சலிக் கூட்டம் வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் உதவி மாவட்ட ஆணையாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.
இவ் அஞ்சலி நிகழ்வில் கௌரவ மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர் திரு.கு.கமலகுமார், பெண் சாரண தலைவி திருமதி மோ.சுதர்ஷினி, திரி சாரணர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமரர் c.பட்டுவன்கல அவர்கள் 1947 ஆம் ஆண்டு தனது 12ஆவது வயதில் சாரணர் அமைப்பில் இணைந்து கொண்டதுடன் தனது சாரணர் வாழ்கையில் கால் பத்தித்தவர், 1958 ஆம் ஆண்டு பெரதெனிய இலங்கை பல்கலைக்கழகத்தில் தனது இளமானிப்பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன். தொடர்ந்து கட்டுகஸ்தோட்ட ராகுல வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், பின்னர் இலங்கை இறப்பர் கூட்டுறவு உற்பத்தி சபையின் பொது முகாமையாளராகவும் கடமையாற்றினார்.
பின்னர் 1989 -1994 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்ட சாரண ஆணையாளராகவும், 1994 ஆம் ஆண்டு மேல் மாகாண உதவி சாரண ஆணையாளராகவும், தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு பிரதி பிரதம ஆணையாளராகவும், தொடர்ந்து 2007-2012 வரையான காலப்பகுதியில் இலங்கை சாரணர் சங்கத்தின் 17 ஆவது பிரதம ஆணையாளராகவும் செயற்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தின் 7 மாடிகள் கொண்ட தலைமை காரியாலயத்தினை நிறுவுவதற்கு ஆரம்ப வழிகாட்டலையும் திட்டமிடலையும் தொடர்ந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து 2014-2016 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சாரணர் சங்க தலைவராக போட்டிகள் எதுவுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 9வது சாரணர் தேசிய ஜம்போறியிலும் தனது சாரண பணியினை செவ்வனே செய்து தனது 81 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.






