
மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் அரையிறுதியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.
193 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்திய மே.இ.தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்று இந்தியாவை வெளியேற்றியது.
கடைசி 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜாவிடம் பந்தைக் கொடுக்க, 19 ஆவது ஓவரில் முதல் 4 பந்துகளில் 2 ஓட்டங்களையே கொடுத்தார் ஜடேஜா, ஆனால் அடுத்த பந்தில் ரஸல் நேராக சிக்ஸர் ஒன்றை விளாசினார். அதோடு இல்லாமல் கடைசி பந்தை பவுண்டரியுடன் முடிக்க அந்த ஓவரில் 12 ஓட்டங்களை சேர்த்தது மேற்கிந்தியத் தீவுகள்.
கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் கோலியிடம் கடைசி ஓவர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் 2 பந்துகளில் 1 ஓட்டத்தைத்தான் கொடுத்தார், ஆனால், 3 ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ரஸல். பிறகு 4ஆவது பந்தை மிகப்பெரிய சிக்ஸர் அடிக்க அதுவே வெற்றி சிக்ஸராக அமைய மே.இ.தீவுகளின் கொண்டாட்டம் தொடங்கியது.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனான சிம்மன்ஸ் 3 முறை தப்பிப் பிழைத்தார். ஒரு முறை அஷ்வின் பந்தில் பும்ராவிடம் பிடிகொடுக்க அது நோபோலாக அமைந்தது. மீண்டும் ஒரு முக்கியக் கட்டத்தில் பாண்டியா பந்திலும் பிடிகொடுத்தார். பிடியும் எடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் நோபோல் ஆனது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 192 என்ற இமாலய இலக்கை எட்டியது. இதில் கோலி ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு ஆட வந்த மேற்கிந்தியத் தீவுகளின் கெய்ல் (5), சாமுவல்ஸ் (8) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த சிம்மன்ஸ், சார்லஸ் ஜோடி இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்து. இருவரும் இணைந்து 10.1 ஓவர்களில் 97 ஓட்டங்களை விளாசினர்.
சார்லஸ் 52 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதுவும் திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து இறங்கிய ரஸல், சிம்மன்ஸுடன் இணைந்து அடுத்த 6.3 ஓவர்களில் 80 ஓட்டங்களை விளாசியதில் இந்திய அணியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை, சிம்மன்ஸ் 82 ஓட்டங்களையும், அதிரடி மன்னன் ரஸல் 43 ஓட்டங்களையும் பெற்றனர். மொத்தம் 20 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அதாவது 146 ஓட்டங்கள் ஓடாமலேயே எடுக்கப்பட்டன. பவர் ஹிட்டிங் என்றால் என்ன என்பதை மே.இ.தீவுகள் நேற்று காண்பித்தது.






