இரண்டாவது முறையாக உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் வசம்!!

468

WI

உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றியீட்டி சம்பியனாகியுள்ளது.

அரையிறுதியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்தும், இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகளும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இதன்படி கல்கத்தாவில் நடைபெற்ற இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

எனவே துடுப்புடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்ப வீரர்கள் கைகொடுக்காத போதும் அதிரடியாக ஆடிய ரூட் 54 ஓட்டங்களை விளாசினார்.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இங்கிலாந்து 155 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி 156 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது. அந்த அணி சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

எனினும் சிறப்பாக விளையாடிய சாமுவேல் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களை விளாச அந்த அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 161 ஓட்டங்களை குவித்தது.

இதற்கமைய 4 விக்கெட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி வாகை சூடியுள்ளது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற மகளிருக்கான 20க்கு இருபது இறுதிப் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.