
நகைச்சுவை வேடங்களில் ரசிகர்களை கவர்ந்த வடிவேலு, நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க இருக்கின்றார்.
தமிழ் திரை உலகை தனது வித்தியாசமான நகைச்சுவையாலும், நடிப்பாலும் கலக்கியவர் வடிவேலு. கடந்த சட்டசபை தேர்தலின் போது அரசியலுக்கு சென்ற அவர் பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
என்றாலும், தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். வழக்கமான நகைச்சுவை வேடங்களில் நடிக்கவில்லை. பலர் தங்கள் படங்களில் அழைத்தும் அதை வடிவேலு ஏற்கவில்லை.
நீண்ட நாட்களாக திரைஉலகை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலின் போது நடிகர்களுடன் தலை காட்டினார். நாசர், விஷால் தலைமையிலான அணிக்கு ஆதரவு கொடுத்தார். நடிகர் சங்க இடத்தை காணவில்லை என்று கூறி கலகலப்பூட்டினார்.
அதன் பிறகு வெற்றிபெற்ற விஷால் அணியை நேரில் சென்று வாழ்த்தினார். நடிகர் சங்க நிகழ்ச்சிகள், பொதுக்குழு ஆகியவற்றிலும் பங்கேற்றார். இப்போது, விஷாலின் புதிய படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் நகைச்சுவையில் கலக்க வருகிறார்.
விஷால் நடிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திமிரு படத்தில் வடிவேலு நடித்தார். இப்போது விஷாலின் புதிய படமான கத்திச்சண்டையில் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை சுராஜ் இயக்குகிறார்.
இதன் மூலம் மீண்டும் வடிவேலு தமிழ்பட உலகை கலக்க இருக்கிறார். நலன் குமாரசாமியின் அடுத்த படத்திலும் வடிவேலுவை நடிக்க அழைத்துள்ளனர்.





