
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை பி.டபிள்யூ.டீ பிரிவு பகுதியில் மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்ததில் குறித்த ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதேவேளை, மரம் முறிந்தமையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதோடு, பகுதியளவில் இரு வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.மின் கம்பிகள் அறுந்து விழுந்ததை அறியாது இரு பெண் தொழிலாளிகள் அதனை தொட்டதன் காரணமாக மின்சார தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.விபத்துக்குள்ளான குறித்த இரு தொழிலாளிகளும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, செயலிழந்த மின்சாரத்தை செயற்படுத்த அட்டன் மின்சாரசபையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





