உடன் அமுலாகும் வகையில் அனைத்து மதுபான வகைகளுக்கும் தடை!!

730

bottles-and-glasses-of-alcohol

உள்நாட்டு, வெளிநாட்டு என அனைத்து வகையாக மதுபானங்களும் விற்பனை செய்வதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக பீகாரில் நேற்று முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி தரப்படாது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார். அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இராணுவ சிற்றுண்டிச்சாலைகளில் மதுவிற்பனை தொடரும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பீகார் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று ஐக்கிய ஜனதா தள தலைவர்களில் ஒருவரான நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தார்.தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அவருடைய கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றதும் பீகாரில் ஏப்ரல் 01ம் திகதி முதல் மதுவிலக்கு அமுலுக்கு வரும் என்று நிதிஷ்குமார் அறிவித்தார்.

எனினும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை பெரிய மற்றும் சிறிய நகரங்களில் விற்பதற்கான அனுமதி மட்டும் நீடித்தது. இந்த வகை மதுபானங்களின் விற்பனையையும் தடை செய்யவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் தரப்பில் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிலையில் உள்நாட்டு, வெளிநாட்டு என அனைத்து வகையாக மதுபானங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது.