
கடந்த வாரம் கபாலி டப்பிங்கை தொடங்கிய ரஜினி, இந்த வாரம் அந்த பணிகளை எல்லாம் முடித்து கொடுத்துவிட்டதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கபாலி. இப்படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினி. ஒரு வாரத்திற்குள் இப்படத்தில் அவருக்குண்டான டப்பிங் பணிகளை எல்லாம் பேசி முடித்துவிட்டார். ரஜினியைத் தொடர்ந்து மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விரைவில் இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர். ரஜினி இப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.O’ படத்தின் பணிகளில் ஈடுபடவுள்ளார்.





