
இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விடுதிப் பற்றாக்குறை பிரச்சினை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.அழகியல்கலைப் பீடம் மற்றும் சுதேச வைத்தியத்துறை பீடங்களுக்கான இரண்டு புதிய விடுதிகள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது .இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
வைபவத்தின்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கிரியெல்ல,எமது அரசாங்கம் பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி என்றில்லாது ஒட்டுமொத்த கல்வித்துறைக்கும் பாரிய நிதியொன்றை ஒதுக்கியுள்ளது.அதிலும் குறிப்பாக நாங்கள் உயர்கல்வித்துறை மீது கூடுதல் கரிசனை கொண்டுள்ளோம்.
பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியாகும் மாணவர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் தொழில் ஆற்றல்களைக் கொண்டவர்களாக வெளியாக வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கரிசனையுடன் செயற்படுகின்றார்.
எமது அரசாங்கத்தில் மாணவர்களுக்கு போதுமான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடின் றி பல்கலைக்கழக நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் பற்றாக்குறை குறித்தும் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம்.
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் துரிதகதியில் 60 விடுதிகட்டிடங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.இதன் மூலம் 2018ம் ஆண்டுக்குள் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விடுதிப்பற்றாக்குறை பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் கிரியெல்ல தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.





