சென்னையின் மனித நேயம் : விக்ரம் வெளியிட்டுள்ள பாடலில் நடிகர்கள் பலர் பங்கேற்பு!!(வீடியோ)

421

vikram

சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை முன்வைத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ரம்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம், சென்னையில் பெய்த கன மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். உணவு, உடையின்றி அவதிப்பட்டார்கள்.

சோகத்தில் தத்தளித்த ஆயிரக்கணக்கானோருக்கு அரசின் நிவாரண உதவிகளோடு, முகம் அறியாதோர்களின் உதவிகள் கிடைத்தன. உலகின் பல மூலை முடுக்குகளிலிருந்தும் மக்களுக்கான உதவிகள் வந்து குவிந்தன.

அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் வெள்ள நிவாரணப் பணிகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டார்கள்.
சமூகவலைத்தளங்கள் வழியாக சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி போன்ற நடிகர்களும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக தங்களை ஈடுபடுத்தினார்கள்.

ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் வழியாக சென்னை மக்களுக்கு உதவுகிறவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டார்கள்.

சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை முன்வைத்து சென்னை மக்களின் மனிதநேயத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஸ்பிரிட் ஆஃப் சென்னை (SPIRIT OF CHENNAI) என்றொரு பாடலை இயக்கி வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ரம்.

மதன் கார்க்கி, ரோகேஷ், கானா பாலா ஆகியோர் பாடலை எழுதியுள்ளார்கள். கிரிநாத் இசையமைத்துள்ளார். எஸ்.பி.பி., சங்கர் மகாதேவன், ஹரிஹரன், கார்த்திக் போன்ற பல பிரபல பாடகர்கள் பாடியுள்ளார்கள்.

அபிஷேக் பச்சன், சூர்யா, கார்த்தி, பிரபுதேவா, சிவகார்த்திகேயன், நயன்தாரா, நித்யா மேனன், அமலா பால் உள்ளிட்ட நடிகர்கள் பலர் இந்தப் பாடலில் பங்கேற்றுள்ளார்கள்.