
நட்சத்திர கிரிக்கெட் போட்டி விடயத்தில் தனக்கும் அஜித்துக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த கிரிக்கெட் போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், ரமணா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது விஷாலிடம் பத்திரிகையாளர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்திய விஷயத்தில் அவருக்கும் அஜித்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக வெளிவந்த செய்திகள் குறித்து கேள்வி கேட்டனர்.
அதற்கு விஷால் விளக்கம் அளிக்கும்விதமாக பேசும்போது, நட்சத்திர கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணியை தொடங்குவதற்கான பணம் கிடைத்துள்ளது. அஜித்துக்கும் எனக்கும் பிரச்சினை என்பதுபோல் வெளிவந்த செய்திகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.
உண்மையை சொல்லப்போனால் எனக்கும் அஜித்துக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவரை நாம் நிகழ்ச்சிக்கு அழைக்கிறோம் என்றால், வருவதும் வராததும் அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. நடிகர் சங்க நிர்வாகிகளின் நலனுக்காகத்தான் நாங்கள் பொறுப்புக்கு வந்தோம். பிரச்சினை செய்வதற்காக வரவில்லை. சங்க நிகழ்ச்சிக்கு வராதவர்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. அஜித், ரஜினி, கமல் ஆகியோரின் மீது எனக்கு மிகுந்த பாசம் உண்டு என்று தெரிவித்தார்.





