
ஜார்கண்டில் கல்லூரித் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, தேர்வு அறையிலேயே அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்டில் கிரிதி மாவட்டத்திலுள்ள தேர்வுமையம் ஒன்றில் பாரதி குமாரி என்ற 21 வயது மாணவி தேர்வு எழுத வந்திருந்தார்.
இவர் தன்வர் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவி. தனது வீட்டிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவு ஆட்டோவில் பயணம் செய்து அவர் தேர்வு மையத்திற்கு வந்துள்ளார்.தேர்வு தொடங்கும் வரை அவர் சாதாரணமாகவே இருந்துள்ளார்.ஆனால், சிறிது நேரத்திலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் அளித்தது.
ஆனால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாக, தேர்வு அறையிலேயே பாரதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.இதனைக் கண்டு தேர்வு எழுத வந்திருந்த மற்ற தேர்வர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக தேர்வு கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





