
உத்தரப்பிரதேசத்தில் இரவில் அணைக்காமல் விடப்பட்ட மெழுகுவர்த்தியால், வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் குயிலா கண்டோன்மெண்ட் பகுதியில்அமைந்துள்ளது காலிதாம் கோவில். இந்த கோவிலின் அருகே வீடொன்றில், நான்கு சகோதரிகளும், அவர்களுடைய உறவுக்கார சிறுமிகள் இருவரும் தங்கி இருந்துள்ளனர்.
இவர்களது பெற்றோர் பக்கத்து ஊரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றதால், சிறுமிகள் மட்டும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, இரவு உறங்கச் செல்வதற்கு முன்னால் மெழுகுவர்த்தியை அணைக்க சிறுமிகள் மறந்து விட்டதாகத் தெரிகிறது.இதனால், அதில் இருந்து பற்றிய தீ, வீடு முழுவதும் பரவியது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தைக் கண்டு அக்கம்பக்கத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.
தீயை அணைக்க அவர்கள் முயற்சித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த ஆறு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சகோதரிகள் சலோனி (வயது17), சஞ்சனா (15), பூரி (10), துர்கா (8) என்றும் அவர்களுடைய உறவுக்கார சிறுமிகள் மகிமா(9) மற்றும் தபு (7) என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு சிறுமிகள் பலியான இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





