யாழில் பேருந்தை மறித்து ரவுடிகள் அட்டகாசம் : நடத்துநர், பயணி மீது தாக்குதல்!!

644

Fight

யாழ் குடாநாட்டில் கட்டுக்கடங்காமல் ரவுடிகளின் அடாவடித்தனம் தொடர்ந்து செல்வதாக பொது மக்களினால் விசனம் வெளியிடப்படுகிறது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வடமராட்சிகிழக்கு, நாகர்கோவில் பகுதியில் நடந்தேறியுள்ள சம்பவம் குறித்து இங்கு தெரிவிக்கப்படுகிறது.

பருத்தித்துறையில் இருந்து ஆழியவளை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை நாகர்கோவில் சந்தியில் மறித்த ரவுடிக்கும்பல் நடத்துனரை இழுத்து விழுத்தி தாக்கியதுடன், தட்டிக் கேட்ட இளைஞனையும் கொட்டன்களால் தாக்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

பருத்தித்துறையிலிருந்து ஆழியவளை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மாலை 6 மணியளவில் நாகர்கோவில் சந்தியை நெருங்கிய போது சந்தியில் 20-25 வரையிலான இளைஞர் குழு ஒன்று வீதியை மறித்து படுத்திருந்தது.

சாரதி பேருந்தை நிறுத்திய போது கையில் கொட்டன்களுடன் பேருந்தின் இரு கதவுகள் ஊடாகவும் சடுதியாக ஏறிய இளைஞர் குழுவினர், உடுத்துறையைச் சேர்ந்தவர்கள் யாராவது இருந்தால் கீழே இறங்குமாறு உரத்த குரலில் சத்தமிட்டனர்.

அதன்போது, அவர்களை ஏன் இறங்கச் சொல்கிறீர்கள் எனக் கேட்ட நடத்துனரை பிடித்து இழுத்து வீழ்த்தி சேட்டைக் கிழித்ததுடன், தொலைபேசியையும் பறித்து எறிந்து அவரின் தங்கச் சங்கிலியையும் அறுத்து அடாவடித்தனம் புரிந்தனர்.

இதனை பேருந்துக்குள் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், நடத்துனரை ஏன் அடிக்கிறீர்கள் எனக் கேட்ட போது, குறித்த இளைஞரின் தலையிலும் அவர்கள் கொட்டன்களால் தாக்கினர்.

இதனால் தலையில் அடிபட்ட அந்த இளைஞரும் மயங்கி விழுந்தார். வீழ்ந்தவரையும் சரமாரியாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட பேருந்தின் சாரதி, பேருந்தை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கொண்டு சென்று நிறுத்தி பொலிஸாருக்கு விடயத்தைக் கூறியதுடன், காயமடைந்தவரை மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது அந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தும், பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று சனிக்கிழமை காலையில் இருந்து வடமராட்சி கிழக்கிற்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது சேவையினை பகிஷ்கரிப்புச் செய்தன.

தமக்கும் பேருந்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பில்லை என்பதால் பேருந்து சேவையில் ஈடுபட முடியாது என அவர்கள் கூறி பேருந்து சேவையை முற்றாக பகிஷ்கரித்தனர்.

இது விடயம் புலனாய்வுப் பிரிவு மூலம் மேலிடத்திற்கு தெரியவரவே பொலிஸார் உடனடியாக தலையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக காயமடைந்த நபரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பொலிஸார் பார்வையிட்டதுடன், தனியார் பேருந்து சங்கத்தினருடனும் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின் போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் திரு க.கனகேஸ்வரன் மற்றும் பொலிஸார் இணைந்து பேருந்து சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என உறுதி மொழி வழங்கப்பட்டதாக தனியார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று சனிக்கிழமை நண்பகலிலிருந்து பேருந்து சேவையில் ஈடுபடப்போவதாக தெரிவித்த அவர்கள் ஏதேனும் இடை யூறுகள் ஏற்பட்டால் பொலிஸாரும், பிரதேச செயலருமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறினர்.

அதேவேளை இச்சம்பவம் பற்றி வினவிய போது உடுத்துறைப் பகுதியில் விளையாட்டு நிகழ்வு ஒன்று நடைபெற்றதாகவும், அங்கு நடந்த விளையாட்டுப் போட்டியில் நாகர்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் குழுவினர் தோல்வியடைந்ததாகவும், அதனைப் பொறுக்கமாட்டாத குழுவினரே இந்த அடாவடித்தனம் புரிந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் நாகர்கோவில் பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சிலரைக் கைது செய்துள்ளதாகவும், ஏனையோர்கள் தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.