பிறந்து நான்கு நாட்களான குழந்தை எறும்பு கடித்து உயிரிழப்பு!!

618

Baby

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரசு வைத்தியசாலையில் கடந்த 29ம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை, 4 நாளே ஆன அந்த குழந்தையின் மீது ஏராளமான எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன. இதை கண்ட லட்சுமி உடனே அங்கிருந்த செவிலியர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

எறும்புகளை செவிலியர்கள் துடைத்த போது குளுக்கோஸ் போத்தல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த குழந்தை இறந்தது. எறும்புகள் கடித்ததாலும், குளுக்கோஸ் போத்தல் விழுந்ததாலும் குழந்தை இறந்ததாக உறவினர்கள் கதறி அழுதனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த வைத்தியர்கள், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாலேயே குழந்தை இறந்தது என்றனர்.

இதுபற்றி அறிந்த காங்கிரஸ் மற்றும் வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வைத்தியசாலை முன்பு போராட்டம் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதே போல சில மாதங்களுக்கு முன்பு குண்டூர் அரசு ஆஸ்பத்திரியில் எலி கடித்து ஒரு குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது.