அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 3 வயது சிறுவனுக்கு ‘எய்ட்ஸ்’: நடந்தது என்ன?

729

1 (3)

அஸ்ஸாம் மருத்துவமனையில் 3 வயது சிறுவனுக்கு சிகிச்சையின் போது அளிக்கப்பட்ட ரத்தத்தால் எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கவுகாத்தி அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம், சிறுவன் ஒருவன் உடலில் 40 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.

அங்கு 5 மாதம் நடந்த சிகிச்சையை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் 3ம் திகதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளான்.இதையடுத்து இந்த வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி, மீதமுள்ள சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் சேர்த்த போது எடுத்த ரத்த பரிசோதனையில், அச்சிறுவனுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் உள்ளது தெரியவந்துள்ளது.

தீக்காயங்களுக்காக நடந்த சிகிச்சையின் போது அச்சிறுவனுக்கு பல்வேறு முறை ரத்த பரிமாற்றம் நடந்துள்ளது. அச்சிறுவனுக்கு தற்போது நோய் பரவாமலிருக்க சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள் இதுபற்றி கூறுகையில், அச்சிறுவனுக்கு கடந்த ஆண்டு சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர், 6 மாதங்கள் கழித்தே மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.எனவே அந்த 6 மாத காலத்தில் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. மேலும், எங்கள் ரத்த வங்கியில், எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ரத்தம் இருக்க வாய்ப்பில்லை.

எனினும், தற்போது ரத்த வங்கியில் இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.குழந்தையின் தாய் கூறுகையில், நாங்கள் மிகவும் பயத்திலும் வருத்தத்திலும் இருக்கிறோம். எங்கள் மகனின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சத்தில் இருக்கிறோம்.

நாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது இந்த மருத்துவ செலவை எப்படி ஏற்க போகிறோம் என தெரியவில்லை என கூறியுள்ளார்.பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விடயம் தொடர்பாக விசாரிக்க, 5 பேர் கொண்ட மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2013ம் ஆண்டு, அஸ்ஸாமில் உள்ள தராங் மாவட்டத்தில் உள்ள Mangaldai அரசு மருத்துவமனையில், ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெற்ற 4 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டின் அறிக்கை படி, சுமார் 21.7 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.