
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீட்கப்பட்டார். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான கஜினியிலிருந்து அமெரிக்க மற்றும் ஆப்கான் படைகளின் கூட்டு முயற்சியில் அலி ஹைதர் கிலானி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முல்தான் நகரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டிருந்தப்போது கிலானி துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுஃப் ரஸா கிலானி, தனது பதவிக் காலத்தின்போது தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது மகன் அலி ஹைதர் கிலானி போட்டியிட்டார். அந்தத் தேர்தலையொட்டி, பஞ்சாப் மாகாணம், முல்தான் நகரில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அலி ஹைதரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.





