இலங்கை அகதிகள் முகாமில் தீவிர கண்காணிப்பு!!

526

Refugee_India

அவுஸ்திரேலியா செல்லும் ஆசையில் உள்ள அகதிகளை குறிவைத்து, தமிழக அகதிகள் முகாம்களில் முகவர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இவற்றை கியூ பிரிவு பொலிஸார் தீவிரமாக கண்காணித்து, புதியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், உள்ளூர் முகவர்களை பிடிப்பதில், தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர், அவுஸ்திரேலியா செல்ல விருப்பமாக உள்ளனர். அதற்காக பல லட்சம் ரூபாய் வரை கொடுக்க தயாராக உள்ளனர். இதை அறிந்த முகவர்கள் முகாம்களில் உள்ள வசதியான அகதிகளை கண்டறிந்து, அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பெறுகின்றனர்.

பின் விசைப்படகில் அவர்களை அழைத்துச் சென்று ஏதாவது ஒரு கடற்கரை பகுதியில் இறக்கிவிட்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு தப்பி விடுகின்றனர். சில முகவர்கள் விசைப் படகுகளில் 10 முதல் 15 நாட்கள் வரை ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அவுஸ்திரேலியா செல்லும் படகிற்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீர், டீசல், உணவு தயாரிக்க பயன்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை பாதுகாத்த இருவர் மட்டுமே பிடிபட்டனர்.

சில நாட்களுக்கு முன் மண்டபம் முகாமைச் சேர்ந்த சிலரை முகவர்கள் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று வேளாங்கண்ணி விடுதியில் தங்க வைத்திருந்தனர். அவர்களை அங்குள்ள கியூ பிரிவு பொலிஸாரர் பிடித்தனர்.

இதனால் அனைத்து முகாம்களிலும் முகவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியை, கியூ பிரிவு பொலிஸார் முடுக்கிவிட்டு உள்ளனர். ஆனாலும் முகவர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யும் உள்ளூர் முகவர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் வேளாங்கண்ணியில் பிடிபட்ட முகவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து தற்போது, முகாம்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.