எதிர்வரும் 23.05.2016 திங்கட்கிழமை இடம்பெறவுள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசி விசாக பொங்கலை முன்னிட்டு தீர்த்தமெடுத்தல் நிகழ்வு நேற்று(16.05.216) சிறப்பாக நடைபெற்றது.
காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான தீர்த்தக்குடம் தாங்கிய குழுவின் நடைபவனி பெருந்தெரு வீதி வழியாக அம்மன் சந்தியை அடைந்து புதறிகுடா ஊடாக ஊற்றங்கரையை அடைந்து பின் முல்லைத்தீவு பிரதான வீதியூடாக சிலாவத்தை சந்தியை அடைந்து சிலாவத்தை தீர்த்தக்கரை புனித பிரதேசத்தில் தீர்த்தமெடுத்தல் பி.ப 6.15 மணியளவில் நடைபெற்றது.
நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தபோதும், தீர்த்தமெடுத்தலின்போது மழை முற்றாக ஓய்ந்து கடல் கடும் அலைகொண்டு புனித தீர்த்தகுடம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
தீர்த்தமெடுத்தல் கிரியை
அன்று இப்பகுதி மக்கள் விரத அனுட்டானங்களுடன் இருந்து பிற்பகல் ஒருமணியளவில் முள்ளியவளைக் காட்டுவிநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுக்கச் செல்லும் வைபவத்தில் கலந்து கொள்வர். பாக்குத்தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வர்.
தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத் துணியால் கட்டியிருப்பர். சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கப்படும். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர். குடலில் இறங்கி வாயூறு நீர்வரைக்கும் சென்று நிற்பர். பாத்திரத்தைத் தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் நீரால் நிறைந்துவிடும். நீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப் பூசனை புரிந்தபின் மாலை ஆறுமணியளவில் அங்கிருந்து புறப்படுவர்.
அப்பொழுது கடற்கரை மண் சிறிதளவு எடுத்துத் துணியில் முடிந்துகொண்டு இன்னொருவர் செல்லத் தீர்ததக்குடம் வரும் வழிநெடுகிலும் மக்கள் பந்தரிட்டு மாவிலைத் தோரணம் இட்டு, நிறைகுடம் வைத்து வரவேற்பர். இங்ஙனம் வரிசையதக வைக்கப்பட்ட நிறைகுடப் பந்தரில் தரித்து நின்று இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் காட்டுவிநாயகர் ஆலயத்துக்குத் தீர்த்தக்குடம் விநாயகர் ஆலயத்தை அடைந்ததும் அங்கு விசேட பூசை நடைபெறும்.
இத்தருணம் அடிக்கப்படும் ஆலயமணியின் ஓசையும் பறை ஒலியும் சேர்ந்து பரவி அப்பகுதி மக்களை மெயசிலிர்க்க வைக்கும். தீர்த்தக்குடத்தை விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் மண்டபத்தில் இறக்கி வைப்பர். இரவு 10 மணியளவில் அம்மன் மண்டபத்தில் கும்பம் வைத்து (அம்மன் கும்பம்), மடை பரவி, ஒரு மட்பாத்திரத்தில், கொண்டுவரப்பட்ட உப்புநீரை நிரப்பி, அதனைக் கடற்கறை மண்மீது வைத்துத் திரியிட்டு விளக்கேற்றுவர். கடல்நீரில் விளக்கெரியும் அற்புதம் தொடர்ந்து ஏழு தினங்கள் காட்டுவிநாயகர் அம்மன் மண்டபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும்.