
வாக்காளர் பட்டியலில் இறந்து போனதாக குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் நேரடியாக வந்து வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கும் கடந்த 16ம் திகதி வாக்குபதிவு நடந்தது. வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு நேற்று முன்தினம் சின்ன அல்லாபுரத்தைச்சேர்ந்த மணி(வயது 70), சகாதேவன்(வயது 80) ஆகிய இருவரும் வாக்களிக்க வந்தனர்.
அவர்களிடம் ‘பூத் சிலிப்’புகளும் இருந்தன. ஆனால் வாக்காளர் பட்டியலில், சரிபார்த்த போது, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை குறிக்கும் வகையில் சிவப்பு மையால் கோடிட்டு, ‘டி’ என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டு இருந்தது. எனவே, இருவரையும் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறவே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்துவேலூ ர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், மணி, சகாதேவன் ஆகியோரிடம்இருந்து, “வாக்களிக்க அனுமதி தாருங்கள், முறையான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. இறந்தவர்களாக குறிப்பிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எழுத்து பூர்வமாக கடிதம் எழுதி வாங்கிய பின்னர் வாக்களிக்க அனுமதித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





