தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். இதில், ஜெயலலிதா மூன்றாமிடத்திலும், கருணாநிதி நான்காம் இடத்திலும் உள்ளனர்.
தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், இந்த முறை அதிக அளவில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டனர்.
இதில், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 997 பேரில் 553 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்தது.தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
இந்நிலையில், தமிழக மக்கள் புதிதாக தேர்ந்தெடுத்துள்ள எம்.எல்.ஏ.க்களில் 170 பேர் கோடீஸ்வர்களாக உள்ளனர் . இதை தொடர்ந்து, மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 70 சதவீதம் எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே அதிக எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக இருப்பது இதுவே முதல்முறையாகும்.இதில், அதிக கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள பணக்காரக் கட்சி என்ற முதலிட அந்தஸ்தை அ.தி.மு.க. தட்டிச் சென்றுள்ளது.
வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களில் 91 பேர் கோடீஸ்வரர்கள். இதற்கு அடுத்தபடியாக 73 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சி என்ற 2வது இடத்தை தி.மு.க. பிடித்துள்ளது.
இதேபோல், வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரில் 5 பேர் கோடீஸ்வரர்கள். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.யும் கோடீஸ்வரர் அந்தஸ்துடன் உள்ளார்.
இந்த 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் முதல் இடத்தை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 337 கோடியாகும்.
அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் ரூ.170 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா ரூ.113 கோடி சொத்துக்கள் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி ரூ.62 கோடி சொத்துக்கள் மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.