இம்முறை இடம்பெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிகளின் முதலாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியுடன் மோதிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் அணி 9 ஓட்டங்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. பிஞ்ச் (4), மக்கலம் (1), ரெய்னா (1) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
5 ஆவது நபராக களம் இறங்கிய டுவெயின் ஸ்மித் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ஓட்டங்களை குவித்தார்.
ஸ்மித்தின் ஆட்டத்தால் குஜராத் லயன்ஸ் அணி 158 ஓட்டங்களைப் பெற்றது. பெங்களூர் அணியின் வட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்து. அந்த அணியின் ஆரம்ப வீரர் விராட் கோஹ்லி தான் சந்தித்த 2 ஆவது பந்தில் டக் அவுட் ஆகி அதர்ச்சியளித்தார்.
விராட் கோஹ்லியை வீழ்த்திய தவால் குல்கர்னி பந்தில் அனல் பறந்தது. விராட் கோஹ்லியைத் தொடர்ந்து கெய்ல் (9), ராகுல் (0), சச்சின் பேபி (0), ஆகியோரையும் வெளியேற்றினார். மற்றொரு முனையில் வட்சன் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதனால் பெங்களூர் அணி 29 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் பெங்களூர் அணி தோற்றுவிடும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால், டி வி்ல்லியர்ஸ் மட்டும் மைதானத்தில் நின்றிருந்தார். அதனால் பெங்களூர் ரசிகர்கள் மட்டும் நம்பிக்கையில் இருந்தனர்.
6 ஆவது விக்கெட்டுக்கு வில்லியர்ஸ் உடன் ஸ்டூவர்ட் பின்னி ஜோடி சேர்ந்தார். ஜகாதி வீசிய 9-வது ஓவரில் பின்னி 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 18 ஓட்டங்கள் கிடைத்தது. ஆனால், அடுத்த ஓவரில் பின்னி ஆட்டமிழந்தார், அவர் 15 பந்தில் 21 ஓட்டங்களை சேர்த்தார்.
அடுத்து இக்பால் அப்துல்லா டி வில்லியர்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். அப்துல்லா நிலைத்து நின்று ஆடினார். சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ் 33 பந்தில் அரைச்சதம் அடித்தார். ஸ்மித் வீசிய 15 ஆவது ஓவரில் டி வில்லியர்ஸ் 11 ஓட்டங்கள் அடித்தார். அடுத்த ஓவரில் டி வில்லியர்ஸ், அப்துல்லா தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். அதன்பின் பெங்களூர் பக்கம் ஆட்டம் திரும்பியது.
பிராவோ வீசிய 18 ஆவது ஓவரில் இக்பால் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
19 ஆவது ஓவரின் 2 ஆவது பந்தில் 2 ஓட்டங்களைப் பெற்று பெங்களூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களைக் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டி வில்லியர்ஸ் 46 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 78 ஓட்டங்களை எடுத்தும், அப்துல்லா 24 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 31 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு உதவினார்கள். குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக குல்கர்னி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
ஆட்டநாயகனாக டி வில்லியர்ஸ் தேர்வுசெய்யப்பட்டார். மேலும் பெங்களூர் அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடப்போகும் அணி எது என்பது இன்னும் இரண்டு போட்டிகளில் தெரிந்து விடும்.






