இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 27ம் திகதி ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி அந்த அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 498 ஓட்டங்களைப் பெற்ற வேளை, தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.
அந்த அணி சார்பாக சிறப்பாக ஆடிய முஈன் அலி ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களை குவிக்க அலக்ஸ் ஹெலிஸ் (Alex Hales) 83 ஓட்டங்களையும் ரூட் 80 ஓட்டங்களையும் விளாசினர்.
இதனையடுத்து, தனது முதலாவது இன்னிங்சில் விளையாட ஆரம்பித்த இலங்கை அணி, 43.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 101 ஓட்டங்களைப் பெற்ற வேளை அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இதன்படி, 397 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்க மீண்டும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாட களமிறங்கியது.
அந்த அணி சார்பாக சிறப்பாக ஆடிய தினேஸ் சந்திமால் 126 ஓட்டங்களைக் குவித்ததோடு மெத்தியூஸ் 80 ஓட்டங்களைப் பெற்றார்.
எனவே இங்கிலாந்து அணிக்கு 79 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், பதிலளித்து ஆடிய அந்த அணி 23.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 80 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.






