கடன் பிரச்சினையால் 2 மகன்களை கொன்றுவிட்டு பெற்றோரும் தூக்கில் தொங்கிய சோகம்!!

911

Family Sucide in india

கடன் பிரச்சினையால் 2 மகன்களையும் கொன்றுவிட்டு பனியன் நிறுவன அதிபர், மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூரை அடுத்த பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைகண்ணன்(வயது 40), பனியன் நிறுவன அதிபர். அவரது மனைவி பிரபாவதி(35), மகன்கள் தனுஷ்(14), அனுஷ்(8). ஒரு தனியார் பள்ளியில் தனுஷ் 8ம் வகுப்பும், அனுஷ் 4ம் வகுப்பும் படித்துவந்தனர்.

தாமரைகண்ணன் சில ஆண்டுகளாக நொச்சிப்பாளையத்தில் தனது நண்பருடன் சேர்ந்து பனியன் நிறுவனம் நடத்திவந்தார். பல்லடம் அருகே 4 மாடி கட்டிடம் கட்டி, 4–வது மாடியில் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். கட்டிடத்தின் 3 தளங்களில் பனியன் நிறுவனம் புதிதாக தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்துவந்தார்.

தாமரைகண்ணன் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி, மகன்களுடன் காரில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். இரவு தாமரைகண்ணனின் கைபேசிக்கு அவருடைய தம்பி சதீஷ் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. பிரபாவதியின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது அவரும் எடுக்கவில்லை. இதுபற்றி சதீஷ் தனது தந்தை ராஜமாணிக்கத்திடம் கூறினார்.

ராஜமாணிக்கம் நேற்று காலை தாமரைகண்ணனின் வீட்டுக்கு வந்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ராஜமாணிக்கம் அக்கம்பக்கத்தினர் துணையுடன் கதவு கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றார். 4வது மாடியில் உள்ள அறையில் தாமரைகண்ணன், பிரபாவதி ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தனித்தனி அறைகளில் தனுசும், அனுசும் தூக்கில் பிணமாக தொங்கினர்.

இதைப்பார்த்து ராஜமாணிக்கம் கதறி அழுதார். இதுகுறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.

தாமரைகண்ணன், பிரபாவதி ஆகியோர் தங்களின் வாயையும், கண்ணையும் துணியால் கட்டியிருந்தனர். போலீசார் நடத்திய சோதனையில், வீட்டில் இருந்த கணினியில் தாமரைகண்ணன், கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் டைப் செய்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 உடல்களையும் பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

பொலிசார் கூறும்போது, தாமரைகண்ணனுக்கு தொழில் சம்பந்தமாக கடன் பிரச்சினை இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளான அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். முதலில் தனது இரு மகன்களை நைலோன் கயிற்றால் தூக்குப்போட்டு கொலை செய்துவிட்டு, அதன்பிறகு கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது என்றனர்.